நித்தியானந்தா சர்ச்சை - ஹிந்து மதத்துக்கெதிரான சதியா?

Posted: Friday, March 5, 2010 | Posted by no-nononsense | Labels: ,
it is attempt to defame him and all hindus, please dear brothers and sisters do not write bad comments about him - A comment by someone for us to think about the truth.
இந்த சின்ன விஷயத்தை ஏன் பலரும் ஹிந்து மதத்திற்கு ஏற்பட்ட இடராக, அதை அழிக்க நினைக்கும் ஆபத்தாக பார்க்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. முதலில் ஹிந்து என்பதை ஒரு மதம் என்று சொல்வதைவிட, அதை ஒரு வாழ்க்கைமுறை என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். காரணம் இதற்கென பிரத்தியேக மதநூலோ(பகவத் கீதை மதநூல் அல்ல), நெறிமுறைகளோ, கோட்பாடுகளோ கிடையாது. உருவ வழிபாட்டை மையக் கருத்தாகக் கொண்டு அவரவருக்கு தோன்றிய மாதிரி அவரவர் வழிபாடுகள், சடங்குகள் சம்பிரதாயங்களை வகுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இஸ்லாம் போன்ற அந்நிய மதங்களின் படையெடுப்பு நிகழ்ந்தபோதுதான் இந்த வாழ்க்கைமுறைக்கென தனி மத அடையாளம் ஏற்பட்டது.

இதைவிட ஒரு முற்போக்கான மதத்தை பார்க்கமுடியாது. இதனை எதிர்த்துக் கொண்டே இதனுள் நீங்கள் தொடர்ந்து நீடிக்கலாம். எல்லா விமர்சனங்களையும் அது சகிப்புத்தன்மையுடன் அனுமதிக்கிறது. இப்போதுதான் என்று இல்லை, வேத காலம் தொட்டே விமர்சனங்களும் கருத்து வேறுபாடுகளும் இதன் ஒரு பகுதியாகவே இருந்து வந்திருக்கின்றன.

ராமாயணத்தில்கூட ஜபாலி என்பவரின் நாத்திக வாதம் அக்கதையினுள் ஒரு சம்பவமாக இன்றுவரை இடம்பெற்றிருக்கின்றன. அதை யாரும் நீக்கி விட வில்லை. சார்வாகர்கள் என்போர் ஹிந்து மதத்தின் வர்ணம்/சாதி முறைகளை எதிர்த்து பெரிய தர்க்கங்களை நிகழ்த்திய பதிவுகள் இருக்கின்றன. பிற்காலத்தில் சமணம், பௌத்தம் எல்லாம் ஹிந்து மதத்தின் வைதீக போக்கை எதிர்த்து ஹிந்து மதத்தினுள் இருந்து உதித்தவைதான்.

கி.பி முதலாம் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் முற்றிலும் சமணமும் பௌத்தமுமே தழைத்திருந்தன. களப்பிரர் என்னும் முற்போக்கு ஆட்சியாளர்களால் அந்த காலகட்டத்தில் ஹிந்து மதம் கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்டது. அப்போதுதான் பக்தி இயக்கம் தோன்றி ஆழ்வார்களும் நாயன்மார்களும் மீண்டும் பக்தி மார்க்கத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்தனர். ஹிந்து மத வாழ்க்கைமுறை மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தடைப்பட்டிருந்த உருவ வழிபாடு மீண்டும் தொடங்கியது. காரணம் இதில் கழுத்தை நெறிக்கும் கட்டுப்பாடுகள் இல்லை; கைக்கொள்ள மிக எளிதானது. அதனால் இது அழிய வாய்ப்பேயில்லை. வேண்டுமானால் புதுப் புது பிரசங்கிகளும், அவர்கள் தோற்றுவிக்கும் புதுப் புது உட்பிரிவுகளும் அவ்வப்போது தோன்றி மறைந்து வடிவம் மாறலாமேயொழிய, தேய்ந்து அழிந்து போக என் சிற்றறிவுக்கு எட்டியவரை காரணங்கள் கிடையாது.

ஹிந்து மதம் காலத்திற்கு தகுந்த மாதிரி தன்னை அப்டேட் செய்துகொள்வதும் இதற்கு முக்கியமான காரணம். இன்னும் ஐநூறு ஆண்டுகள் ஆனாலும், இஸ்லாத்தின் ஐந்து கடமைகளும், மதச்சட்டமான ஷரியாவும் சிறிதும் மாறப் போவதில்லை. அதில் கை வைக்கும் தைரியம் யாருக்கும் கிடையாது. அதேபோல்தான் கிறிஸ்துவமும். பரிசுத்த வேதாகமமே காலத்திற்கும் வாழ்வியலுக்கான மறை.

ஆனால் ஹிந்து மதத்தில் அப்படி எந்த கட்டுப்பாடும் கிடையாது. காலை அலுவலகம் வந்ததும் கம்யூட்டர் ஸ்கிரீனில் ஒரு பட்டனை க்ளிக் செய்தால், அதுவே மணியடித்து தீபாராதனை காட்டி நமக்கு பதில் பூஜை செய்து முடித்துவிடுகிறது. கையை கூப்பியோ, கன்னத்தில் போட்டுக்கொண்டோ வேலையை தொடங்கி விடலாம். இப்படி ஒரு சௌகரியத்தை எந்த மதத்தின் கோட்பாடுகளிலும் பார்க்க முடியாது. இந்தளவு கட்டற்ற சுதந்திரத்தை வாரி வழங்கும் ஒரு மத ரீதியான வாழ்க்கைமுறையிலிருந்து மக்கள் மாறிவிடுவார்கள் என்று நம்ப இடமில்லை.

எனக்கு ஹிந்து மதத்தின் மீது எவ்வளவோ விமர்சனங்கள் இருக்கலாம்; நண்பர்கள் அறிவார்கள். ஆனால் என்னை ஏதாவது ஒரு மதத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டுதான் ஆகவேண்டும் என்னும் நிலை வந்தால், இதில் பிறந்ததால் மட்டுமல்ல, அதைப்பற்றிய அறிதல் இருப்பதாலுமேகூட சொல்கிறேன், இந்த வாழ்க்கைமுறைதான் என் சாய்ஸ். ஆனால் நான் விரும்பி ஏற்கும் ஹிந்து மதம் இப்போது நீங்கள் பின்பற்றும் வழிபாட்டு வாழ்க்கைமுறையாக இருக்காது. ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றோர் நிகழ்த்திக் காட்டிய பௌத்தத்தின் சாரங்கள் நிறைந்த தர்க்க ரீதியிலான ஹிந்து வாழ்க்கைமுறையாக அது இருக்கும். ஹிந்து மதம் காலம் காலமாக அனுமதிக்கும் உட்பிரிவுதான்; அதன் இன்னொரு பரிமாணம்தான் அதுவும். உருவ வழிபாடு கொண்டும் வாழலாம். அது இல்லாமலும் வாழலாம். இதை இன்னொரு மதத்துடன் ஒப்பிடமுடியாது.

ஏதோ சில மத சாமியார்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் வரையறுத்து வைத்த சடங்குகள் சம்பிரதாயங்கள் வழிபாட்டு முறைகளை மட்டுமே ஹிந்து மதம் என்று எண்ணி அதை மட்டுமே உரைகல்லாக கொண்டு இதனை அளக்காதீர்கள். இதன் ஆகிருதி அது எல்லாவற்றையும் மீறியது. அளவிடமுடியாதது.

ஆகவே இந்த நித்தியானந்தா போனால் இன்னொரு முக்தியானந்தா வருவார். யாருக்கு எதில் விருப்பமோ அதையதை அவரவர் பின்பற்றுவார்கள். ஹிந்து மதம் தொடர்ந்து அப்படியே நீடிக்கும் - அதன் மீதான விமர்சனங்களுடன்.

இதன் மீது பேச இன்னும் நிறைய இருக்கிறது. நேரம்தான் இல்லை, இருவருக்குமே.

- நண்பர்களுடனான உரையாடலின் ஒரு பகுதி...

0 comments:

Post a Comment