எந்திரன் பகடி குறித்து சில விளக்கங்கள்

Posted: Tuesday, August 10, 2010 | Posted by no-nononsense | Labels:
எந்திரன் பட விளம்பர தாக்குதல்கள் மீதான்  என்கடும் விமர்சனம் எழுப்பிய சர்ச்சையின் போழ்து:

1. நான் எந்திரனை விமர்சிக்கிறேன் என்று ஆரம்பம் முதலே நண்பர் புலம்பி வருகிறான். ஒரு திருத்தம்: அது விமர்சனம் அல்ல, பகடி! கேலி, கிண்டல் என்றும் வேறு வார்த்தைகளில் சொல்லலாம். படம் வராமலே எப்படி என்னால் மட்டும் விமர்சிக்க முடியும்?

2. என்னுடைய பகடிகளெல்லாம் சும்மா வெறுப்பேற்றும் நோக்கத்திலேயே செய்யப்பட்டன. ரஜினிப் படம் வெளியாகும் நேரங்களில் எல்லாம் ரஜினியின் அத்யந்த ரசிகர்களாகிய என் நண்பர்களை சீண்டி வெறுப்பேற்றுவது எனக்கு ஒரு விளையாட்டு. நம்மை நன்றாக புரிந்து கொண்டுள்ள நண்பர்களிடம் தானே நாம் விளையாட முடியும். 

3. ரஜினியின் படங்கள் எல்லோரையும் போல எனக்கும் பிடிக்கும். மாற்று சினிமாக்கள் அதிகம் வர வேண்டும் என்று பேசி வந்தாலும், அதற்காக மசாலா படங்கள் அழிய வேண்டும் என்று நினைக்கும் கட்சி அல்ல நான். இதுவும் இருக்கணும். அதுவும் வளரணும். வணிகப் படங்கள் என்னும் சிங்கம் தின்று போட்ட இரையின் எச்சங்களில் சிறு எறும்புகளாக கலைப் படங்கள் உயிர்த்திருந்தால் கூட போதும். அப்படிகூட நடக்காத சூழலின் போதுதான் நாம் மசலாக்களை விமர்சிக்க தேவை ஏற்படுகிறது.

மசாலா சினிமாக்களின் வர்த்தகத்தில் ரஜினி படங்கள் தன்னிகரவற்றவை என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதனால் பிழைப்பவர்கள் சினிமா தொழிலில் இருப்பவர்கள் மட்டுமல்ல என்பதற்கு கீழேயுள்ள ஒரு சம்பவத்தை உதாரணம் காட்ட விரும்புகிறேன்.

ரஜினி பெயர் வந்தால், அவர் பேசினால், பேசாவிட்டால் எல்லாமே நியூஸ்தான். அப்படிப்பட்டவர் ஏன் ரிஸ்க் எடுத்து சவாலான கேரக்டரில் எல்லாம் நடிப்பதில்லை?
சேலத்தில் ஒரு திரையரங்க முதலாளி தனது தியேட்டர் இருக்கும் வீதியில் காரில் நின்று கொண்டிருந்தபோது அந்த வீதியில் போண்டா , வடையைத் தள்ளுவண்டியில் வைத்து விற்றுக் கொண்டிருக்கும் ஒருவர் தனது மனைவியிடம் ‘அடுத்தவாரம் சாமான்லாம் அதிகமா வாங்கணும் புள்ள. தலைவர் படம் ரிலீஸ் ஆகுதுல்ல’ என்று சொல்லிக் கொண்டிருந்தாராம். அடுத்தவாரம் அவரது திரையரங்கில் ரஜினி படம். சேலம் விநியோகஸ்தராகவும் இருக்கும் அவர் சென்னையில் ரஜினியைச் சந்தித்தபோது இதைச் சொல்லி ‘உங்க படம் ரிலீஸ்னா வீதில வடை போண்டா விக்கிறவர் வரைக்கும் பிழைக்க முடியுது சார்’ என்றாராம். ‘இந்தக் காரணத்துனாலதான் ரிஸ்க் எதுவும் எடுக்காம மக்களுக்கு பிடிச்ச மாதிரி கேரக்டர்ஸ் மட்டும் பண்றேன்’ என்று சொன்ன ரஜினி, ‘இப்ப தயாரிப்பாளர்களுக்குத்தான் பஞ்சம். அடுத்த முறை என்னைச் சந்திக்கறப்ப ஒரு வெற்றிப்பட தயாரிப்பாளரா உங்களை நான் பார்க்கணும்’ என்றாராம் சிரித்தபடி. அதேபோல தனது இரண்டாவது படம் நல்ல வெற்றியை ஈட்ட ரஜினியைச் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட அவர் கஜினி தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன்.
இப்படி கடைமட்டம் வரை பயன்பெறும் ரஜினி என்பவர் வெறும் நடிகர் அல்ல. ஒரு இண்டஸ்ட்ரி. இதற்கு முன் எம்.ஜி.ஆர் இப்படிப்பட்ட ஒரு இண்டஸ்ட்ரியாக விளங்கினார். இப்போது ரஜினி இருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவர் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என்பதாக இல்லாமல் நிறைய படங்களில் நடித்தால் நிறைய ரஜினி படங்கள் ரிலீஸ் ஆகும். நிறைய பேர் பயனடைவார்கள் அல்லவா. 

மாறாக ரஜினி தன் வியாபார வெற்றிகளையும் வருமானத்தையும் மட்டுமே கணக்கில் கொண்டு செயல்படுவது எனக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. 150 கோடியில் ஒரே ஒரு படம் செய்வதால் ரஜினிக்கு சிங்கிள் பேமண்ட்டாக 25 கோடி முதல் ஐம்பது கோடி வரை கிடைக்கலாம். ஆனால் சினிமா தொழிலில் அவரால் பிழைப்பவர்களுக்கு பயன் ஒருமுறைதான். அதே அவர் கொஞ்சம் சின்ன பட்ஜெட் படங்களாக ஐந்தாறு படங்கள் செய்தால் பலருக்கும் பயனுண்டு. 

குசேலன் தோல்வியை விட பெரிய தோல்வியெல்லாம் கண்டவர் எம்.ஜி.ஆர். அவருடைய காதல் வாகனம் படம் ஒரு பாரிய தோல்வி படம். ஆனால் அது எந்த விதத்திலும் எம்.ஜி.ஆரின் சினிமா பாணியை பாதிக்கவில்லை. ஆனால் குசேலன் தோல்வி ரஜினியை இனி சின்ன பட்ஜெட் படம் செய்ய விடுமா என்று தெரியவில்லை. தோல்வியைக் கண்டு துவண்டு பெரிய பட்ஜெட் டைரக்டர்களை நாடும் ரஜினி எனக்கு ஏமாற்றம் அளிக்கிறார்.

5. தனிப்பட்ட முறையில் எனக்கு ரஜினியின் மேல் உள்ள இன்னொரு ஏமாற்றம்: இந்திய சினிமாவில் ரஜினியே புகழ்ந்ததுபோல் அமிதாப் ஒரு பாதுஷா. அவர் படங்களின் வியாபாரம் என்பது இன்றும் அதற்குரிய இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு அமிதாப் என்ன மாதிரி படங்கள் எல்லாம் செய்து வருகிறார்? பிளாக், சீனிகும், பா..!

ஆனால் ரஜினி..? 

ஐஸ்வர்யாராயின் கால்சீட்டுக்காக காலமெல்லாம் காத்திருந்து கட்டிப் பிடித்து டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். எவ்வளவு ஒரு சீனியர் நடிகர், ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் அது எவ்வளவு ஒரு ஆரோக்கியமான விளைவுகளை சினிமா இண்டஸ்ட்ரியில் ஏற்படுத்தும்? நினைத்து பாருங்கள், ‘தவமாய் தவமிருந்து’ படத்தில் ராஜ்கிரண் கேரக்டரை ரஜினி செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? இல்லை ‘காஞ்சிவரம்’ மாதிரி வருடத்திற்கு ஒரு படம்..? ரஜினி போய் அப்படிப்பட்ட படங்கள் எல்லாம் செய்வதா என்று சிலர் நினைக்கக் கூடும். அவர்களுக்கு ‘எங்கேயோ கேட்ட குரலை’ பார்க்க சிபாரிசு செய்கிறேன். அண்மையில் 'ப்ரமரம்’ என்ற ஒரு மலையாளப் படம் பார்த்தேன். மோகன்லாலின் நடிப்பில் லயித்து போனேன். அந்த கேரக்டரை ரஜினி அனயாசமாக செய்யக் கூடியவர் என்பது என் கருத்து. 

இதெல்லாம் காரணமாக எனக்கு ரஜினி மேல் ஒரு சின்ன வருத்தம் உண்டு. அவர் அதீத மேக்கப்பில் ஜிகினா ஜிகிடியாக கண்ணை உறுத்திக் கொடுக்கும் எந்திரன் போஸ்கள் மீது ஒரு கோபம் உண்டு. இதெல்லாம்தான் என் பகடிக்கு காரணம். மற்றபடி ரஜினி ரசிகர்களின் உணர்வை காயப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை.

0 comments:

Post a Comment