கிடாவெட்டு

Posted: Monday, August 30, 2010 | Posted by no-nononsense | Labels:
விர்ர்ர்ரூம்.......!

என்னதான் வண்டியில் செல்ஃப் ஸ்டார்ட்டர் இருந்தாலும் அதை ஒரு உதைவிட்டு ஸ்டார்ட் செய்து சுற்றம் அதிர முறுக்கிவிட்டு ஓட விடுவதில்தான் ஒரு கெத்து இருக்கிறது. பரமசாதுக்களாக பைக்குகளை பாவிப்பவர்களைக் கண்டால் பரிதாபமாக இருக்கும். கனரக பைக்குகள் கம்பீரமான ஆண்மையின் அடையாளம்! என்ஃபீல்டு புல்லட் சவாரிகளைப் போல!

நான் விட்டு கிளம்பிய இடம் மோகனூர் நவலடியான் கோவில். அங்கே ஒரு நண்பரை சந்திப்பதற்காக சென்று விட்டு, ஆரியூர் நோக்கி பைக்கை விரட்டிக்கொண்டு இருந்தேன். கிடாவெட்டு இருந்தது. கோவிலில் இருந்து பாதி பர்லாங்கு தூரம்கூட கடந்திருக்க மாட்டேன். ஒரு சிறிய உருவம் லிப்ட் கேட்டு கைகாட்டியது. முதுகும் சற்றே கூன் போட்டிருந்தது. அம்மனிதருக்கு இருந்தால் 45 வயது இருக்கலாம்.

பொதுவாக யார் லிப்ட் கேட்டாலும் நான் கொடுத்து விடுவது என் வழக்கம். எயிட்ஸ் ஊசி என்று ஒரு கதை முன்பு பரப்பப்பட்டபோது மட்டும் கொஞ்சம் அஞ்சியிருக்கிறேன். மற்றபடி தயங்குவதில்லை. சக மனிதர்கள் மேல் இன்னும் முற்றாக நம்பிக்கையிழக்கவில்லை.

“ரொம்ப நன்றிங்க சார். ஞாயித்து கெழம பார்த்து டூட்டியும் வெச்சிட்டாங்க சார். கோயில்ல கிடாவெட்டும் இருந்துச்சி. ரெண்டையும் விடமுடியாம ஓடிட்டு இருக்கேங்க”

“அது பரவாயில்லைங்க. எங்க இறங்கணுங்க?”

“பஸ் ஸ்டாண்டுல விட்டாங்க போதுங்க சார். மாணிக்கம் பாளையம் போய் சேரணுங்க. டூட்டியிருக்கு”

“அவ்வளவு தொலைவா.. என்ன டூட்டிங்க?”

“கம்பவுண்டரா இருக்கேங்க. 82-ல எம்ஜிஆர் பீரியடுலயே ஜாயின் பண்ணிட்டேன். டிகிரி முடிச்சதும் கெடச்சதுங்க”

நான் மௌனமாக தலையை ஆட்டியபடி வண்டியை செலுத்திக் கொண்டிருந்தேன். அவரே தொடர்ந்தார்.

“அதுல பாருங்க. எம்ஜிஆர் தான் வேலை கொடுத்தாருன்னாலும், டீயெம்கேல ஆட்சியில தான் சம்பளம் பாஞ்சாயிரம் ஆகியிருக்குங்க. முன்னைக்கு இப்ப கொஞ்சம் பரவாயில்லைங்க. அடுத்தாப்லயும் கலைஞர் வந்துட்டா மேலும் கொஞ்சம் போடுவாருன்னு சொல்றாங்க. அவர் செய்வாருங்க”

“ஓ..!” என்று தலையாட்டினேன். டிபிகல் தமிழக அரசு ஊழிய மனோபாவம்.

“நம்ம வீட்டுல இன்னைக்கு வேற விசேஷம் போயிட்டாங்கங்க. பசங்க சின்னவங்க. அதான் நாம இங்க ஓடியாறதா போச்சிங்க. டூட்டியில்லைன்னா இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணி சாப்பிட்டுருக்கலாம்”

“இருந்தாலும் டூட்டிய வெச்சிகிட்டு ஏன் இப்படி சிரமப்படணும். உங்கள பார்த்த அதிகம் அலையமுடியாதவர்ன்னு தோணுது. வர முடியலைன்னு சொல்லியிருக்கலாமே”

“அதெப்படிங்க. கிடாவெட்டுன்னா நமக்குதான் கால் நிக்காதுங்களே!”, சொல்லிவிட்டு வாய்விட்டு சிரித்தார். அதற்குள் பஸ் ஸ்டாண்டு வந்திருந்தது. குறைந்தது மூன்று முறையாவது நன்றி கூறிவிட்டு அகன்றார்.

மிஞ்சிப் போனால் இரண்டு கி.மீ கூட இருக்காது. ஐந்து நிமிட பயண தூரத்திற்குள் வெகு சகஜமாக வேலை, குடும்பம், அரசியல் என்று எத்தனை விஷயங்களை பகிர்ந்துகொண்டு விட்டார் இம்மனிதர் என்று வியப்பாக இருந்தது. வெள்ளந்தியானவராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

சிலர் இப்படித்தான். கணநேர சந்திப்பே கூட அவர்களுக்கு போதுமானது. நீண்ட நாள் பழக்கம்போல் கடகடவென பேச ஆரம்பித்து விடுவார்கள். பஸ் பயணங்களில் அப்படிச் சிலரை அடிக்கடி சந்திக்க நேரிடுகிறது. பல மணி நேர ரயில் சிநேகிதம் கூட இல்லை; சில நிமிட பஸ் சிநேகிதங்களே அவை. ஆனாலும் ஒரு சகஜத்தை(comfort level) அவர்களிடம் உணர முடியும். அப்படி நான் பழகிய ஒரு புனே என்ஜினியரிங் மாணவன் இன்றும் என்னுடன் தொடர்பில் இருக்கிறான். என்னுடைய குணாம்சம் சட்டென்று யாரிடனும் எளிதில் பழகிவிடக் கூடியதில்லை என்றபோதிலும், இம்மாதிரி நபர்களை ஏனோ எனக்கு பிடிக்கவே செய்கிறது.

வண்டி மோகனூருக்கு முன்பாக போட்டிருக்கும் மிகப்பெரிய ரயில்வே பாலத்தை இப்போது கடந்து கொண்டிருந்தது. அநேகமாக நாமக்கல் வட்டாரத்தில் இதுதான் பெரிய பாலம் என்று நினைக்கிறேன். மணிக்கட்டை திருப்பி கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 2-ஐ தாண்டியிருந்தது. வண்டியின் வேகத்தை மேலும் அதிகரித்து விரைந்து ஆரியூரை அடைந்தேன். விருந்து இன்னும் ஆரம்பித்திருக்கவில்லை.

விருந்துகள் எப்போதும் ஒரு குதூகலமான மனநிலையை நம்மில் தோற்றுவிக்கின்றன. விருந்தின் தன்மைக்கேற்றவாறு சில முன்தயாரிப்புகளை நாம் செய்துகொள்கிறோம். விருந்தில் நன்றாக சாப்பிடவேண்டும் என்று முந்தைய வேளைகளில் குறைவாக உண்பவர்களும் உண்டு. விருந்தளிப்பவரின் வசதி நிலைகளை பொறுத்து சில எதிர்பார்ப்புகளை மனம் ஏற்படுத்திக்கொள்கிறது. அதை அவர் நிறைவு செய்வதை பொறுத்து அந்த விருந்தின் வெற்றியும் தோல்வியும் அமைகிறது. ஒருவகையில் அவ்விசேஷத்தின் வெற்றி தோல்வியும் என்றுகூடச் சொல்லலாம்.

கிடாவெட்டைப் பொறுத்தவரை இவை அனைத்துமே இருமடங்காக இருக்கும். கல்யாணத்தை உள்ளூரில் வைத்தால் வரும் கும்பலில் பாதிகூட அசலூரில் வைத்தால் வராது. ஆனால் கிடாவெட்டை எந்த குக்கிராம கோவிலில் கொண்டுபோய் வைத்தாலும் கண்டுபிடித்து, சென்று சேர்ந்து, உண்டு களித்து வருபவர்களே நம்மில் அதிகம். அசைவப் பெருவிருப்பம் கொண்டவர்கள் நாம். அதற்கும் காரணம் அடிப்படையில் நம் சைவ உணவுப்பழக்கம் கொண்டவர்களாக இருப்பதுதான். என்றாவது கிடைக்கும் சுவையுணவின் மீது இயல்பாக ஏற்படும் ஒரு மிகைவிருப்பம்!

என்னைப் பொறுத்தவரை அசைவ உணவுகளில் என்னுடைய விருப்பங்களெல்லாம் கோழி, மீன் ஆகியன மட்டும்தான். ஆட்டிறைச்சியை என் விருப்பப் பட்டியலில் இருந்து விட்டு விலக்கி மாமாங்கம் ஆகிவிட்டது. அதனால் கிடாவெட்டுகளில் விருந்தை முன்வைக்காமல் உறவுகளை மதித்து(!) கலந்துகொள்வதே என் விழைவாக உள்ளது. அதிலும் விசேஷங்கள் நடைபெறும் இடம் கோவில்கள் என்றால் அண்மைகாலமாக என்னை வியாபித்துள்ள சிற்ப ஆராய்ச்சி ஆர்வம் என்னை மேலும் உந்தித்தள்ளிவிடும்.

நான் சென்றடைந்தது ஆரியூர் முத்துசாமி, கன்னிமார் கோவில். சமீப காலத்தில்தான் அங்கேயுள்ள விதானங்களும், உள்ளரங்கங்களும் புதுப்பிப்பப்பட்டன போலும். பழைய சிற்பங்களுக்கெல்லாம் பெயிண்டால் கோட்டிங் வேலை நடந்து கண்ணை உறுத்திற்று. நம் பழையை சிற்ப வேலைப்பாடுகளின் தனித்தன்மையை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு முற்றிலுமாக நம்மிடமில்லை. காவல் தேவதை சிலைகள் மட்டும் இன்னும் பழையனவாகவே இருந்தன. சில போட்டோக்கள் எடுத்துக்கொண்டேன்.

இப்படி தன் போக்கில் சுற்றிக்கொண்டிந்தவனின் தோளில் ஒரு கை விழுந்தது. திரும்பினால்.. பள்ளிநாட்களில் சில இதமான பொழுதுகளை பகிர்ந்துகொண்ட பழைய நண்பன் ஒருவன் முகம் மலர நின்றிருந்தான். நடப்புகால நட்புகளை பரிசீலிக்கும்போது, இவன் போன்ற பல பால்ய தோழமைகள் இடைநின்று போனது பேரிழப்பாக சில நேரங்களில் தோன்றுவதுண்டு. இருவரும் கண்டுபேசி கணகாலம் ஆகியிருந்ததால் உபயகுசலோபரிகளை செய்துகொண்டு, பரஸ்பர தொழில் விவகாரங்களைப்பற்றி பேச்சு ஆரம்பித்தது. நண்பனுக்கும் பங்குசந்தை தொழில் உண்டு என்பதால் பேச்சு அதில் மையம் கொண்டது. வாரம் முழுவதும் அதிலேயே தோய்ந்து கிடப்பதால், வாரயிறுதிகளில் யாராவது ‘ஷேர்.. மார்க்கெட்..’ என்று ஆரம்பித்தால் காதை பொத்திக்கொண்டு காததூரம் ஓடி விடுவேன். ஆனால் சிலரிடம் அப்படி முடிவதில்லை.

சுவாரசியாமாக உரையாடல் சென்று கொண்டிருக்கையில் மனிதர்களிடையே ஒரு பரபரப்பு ஏற்பட்டதை கவனிக்கமுடிந்தது. விருந்து ஆரம்பித்து விட்டிருந்தது. நண்பன் முந்திக்கொள்ள முன்னால் நகர்ந்தான். நான் பிந்திக்கொண்டு பின்னால் வந்து பிரகாரங்களை சுற்றிப் பார்த்தபடி வலம் வந்தேன். ஒதுக்குப்புறமாக இருந்த மரத்தடியில் சிலர் வேகவேகமாக குடித்துக் கொண்டிருந்தார்கள்.

“அதெப்படிங்க. கிடாவெட்டுன்னா நமக்குதான் கால் நிக்காதுங்களே!”... என்னும் கம்பவுண்டர் வரிகளை கொஞ்சம் மாற்றிப் போடத் தோன்றியது. தலையும் நிற்காது.

கல்யாணம், கச்சேரி போன்ற மற்ற எந்த கூடுகையிலும் குற்றமாக கருதப்படும், உள்ளம் அநாவசியமாக குறுகுறுக்கும் செயலாகிய குடி, கிடாவெட்டில் மட்டும் விசேஷத்தின் ஓர் அங்கமாக கருதப்படுவது நம் சமூகத்தின் முரண்நகைகளில் ஒன்று. இதை இன்னும் மறைமுகமாக மட்டும் கொண்டாடிக்கொள்ள முடியும். பொதுவெளியில் அளவாக நாகரிகமாக குடித்து தடுமாறாமல் பேச நாம் கற்றுக்கொள்ளும் வரை அது அப்படி நீடிப்பதுதான் நல்லதும்கூட.

மணி 3 ஆகியிருந்தது. அடுத்த பந்திக்கும் சேர்த்து இப்பவே இடம்பிடித்தபடி மனிதர்கள் நின்றிருந்தார்கள். சாப்பிடும் எண்ணத்தை கைவிட்டு நகர்ந்தேன்.

உணவை விட ஞாயிறு பிற்பகல்களின் ஓய்வு எனக்கு அதிமுக்கியம். வார நாட்களில் மிகநெருக்கடியாக பொழுதுகளை கட்டமைத்துக்கொண்டு, அந்த இடைவெளிக்குள் வாழ முற்படுபவன் நான். அதற்கு அத்தியாவசியமான ஓய்வை ஞாயிறுகளின் நெகிழ்வான உறக்கம் அளிப்பதாக எப்பவும் ஓர் உள்ளுணர்வு. ஓய்வற்று ஒரு ஞாயிறு கடந்து விட்டாலும் கூட அதைத் தொடர்ந்து வரும் வாரம் முழுவதும் எவ்வளவு உறங்கினாலும் மனம் சோர்வாகவே உணரும். அது ஏன் அப்படி என்பதெல்லாம் விளக்கத்துக்கு அப்பாற்பட்ட நுண்ணுனர்வு சார்ந்த விஷயங்கள்.

விர்ர்ர்ரூம்.......!

கிளம்பி விட்டேன்.

0 comments:

Post a Comment