ஹரி மாமியின் ஹரிகதா & சாஹித்ய சங்கீதம்

Posted: Monday, January 4, 2010 | Posted by no-nononsense | Labels:
சென்னையின் சபாக்களில் சங்கீத சீசன் கன ஜோராக நடந்துவருகிறது. அதையொட்டி பத்திரிக்கைகளின் பக்கங்களும் வண்ணமயமான படங்களுடன் படபடக்கின்றன. மாமாக்களும் மாமிக்களும் தொடைத் தட்டி ரசிக்கும் கர்நாடக சங்கீதத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் நெஞ்சம் மேலிட்ட ஆர்வத்தில் உடன் பணிபுரிந்த சங்கீதம் கற்றிருந்த ஸ்ரீரங்க நண்பர் ஒருவரை படுத்தி எடுத்ததில், அடிப்படையான சில விஷயங்களை புரியவைத்து ராகங்களை பகுத்தறியும் பயிற்சியும் சொல்லிக் கொடுத்தார். பிறகு வழக்கம் போல வேறுவேறு விஷயங்களில் ஆர்வம் சென்று மற்ற பல விஷயங்களையும் போலவே இதை பாதியில்விட்டுவிட்டேன். அந்தளவில் அது சங்கீதத்திற்கு நல்லதாகிப் போனது.

அண்மை காலமாக ஒவ்வொரு சீசனிலும் நான் எதிர்பார்த்திருப்பது இரண்டு விஷயங்களை. ஒன்று சஞ்சய் சுப்ரமணியனின் கச்சேரி. இரண்டாவது விசாகா ஹரியின் கதாகாலட்சேபம். மாமியின் உபன்யாசத்தில் ஹரி கதா, ஆண்டாள் திருக்கல்யாணம், தியாகராஜ சரிதம் என்று எதைக் கேட்டாலும் அது திகட்டாத தெள்ளமுது. சனி மாலை ஜெயா டிவியில் மாமியின் மார்கழி மஹா உற்சவ உபன்யாசம் கேட்டதிலிருந்து மீண்டும் பழைய கச்சேரிகளையெல்லாம் நேற்று முழுவதும் தேடியெடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். குறிப்பாக ஆண்டாள் திருக்கல்யாணத்தில் கோதை மாலை சூட்டும் அழகை இதைவிட வேறு யாராவது அழகுபட பாடி விளக்கமுடியுமா?

மாலை சாற்றினாள்! கோதை மாலை மாற்றினாள்!
மாலடைந்து, மதிலரங்கன், மாலை அவர்தம் மார்பிலே,
மையலாள், தையலாள், மாமலர்க் கரத்தினாள்,

ரங்க ராஜனை, அன்பர் தங்கள் நேசனை,
ஆசி கூறி, பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட,
அன்புடன், இன்பமாய், ஆண்டாள் கரத்தினாள்,

மாலை சாற்றினாள்! கோதை மாலை மாற்றினாள்!
பா-மாலை சாற்றினாள்! பூ-மாலை மாற்றினாள்!

*

சாஹித்யம் இல்லாத சங்கீதத்தையே தான் விரும்புவதாக குமுதத்தில் இந்தவாரம் ஞாநி எழுதியுள்ளார். சாஹித்யங்கள் சினிமா பாடல்களுக்கு வேண்டுமானால் சில சமயம் பொருத்தமாகவும் ரசிக்க கூடியதாகவும் இருக்கிறது. ஆனால் சாஸ்திரிய சங்கீதத்திற்கு அது பெரும்பாலான நேரங்களில் திணிப்பாகவே இருக்கிறது என்பதுதான் என் கருத்தும். மேலும், ஞாநி குறிப்பிடுவது போல கர்நாடக சங்கீதத்தைவிட ஹிந்துஸ்தானி இசை அதிக வரவேற்பைப் பெற்றதற்கு காரணம் அதன் குறைவான சாஹித்யம் மற்றும் நெக்குருக வைக்கும் விஸ்தாரமான ஆலாபனைகள்(ஹிந்துஸ்தானியில் ’ஆலாப்’). ராகங்களும் குறைவே. அதனுடன் ஒப்பிடும்போது கர்நாடக சங்கீதம் பத்து, பதினைந்து ராக உருப்படிகளை ஒன்று சேர்த்துக் கட்டிய பண்டல் போல காணப்படுகிறது.

அதைவிட அதை வெகுஜன ரசனையில் இருந்து விலக்கி வைப்பது அதன் தெலுங்கு கீர்த்தனைகள். கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகளாக சென்னை கர்நாடக இசையின் மையப் புள்ளியாக இருந்துவந்தாலும் இன்னும் தமிழிசையின் பக்கம் தலை சாய்க்க நம் வித்வான்கள் மனம் ஒப்பவில்லை. கேட்டால் இந்த சாஹித்யங்கள் எல்லாம் கர்நாடக இசைக்காகவே அர்பணிக்கப்பட்டவை; புனிதமானவை; தெய்வீகமானவை என்கிறார்கள். கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் வாழ்ந்ததும் இக்கீர்த்தனைகளை இயற்றியதும் 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில். இவர்கள் இயற்றிய தெலுங்கு கீர்த்தனைகள்தாம் இன்றளவும் தெய்வீகமாக கருதப்பட்டு பாடப்படுகிறது. அப்படியானால் இவர்களின் காலத்திற்கும் முன் இருந்த சாஹித்ய வடிவம் யாது? அது சமஸ்கிருதம் என்றால் அதன் தெய்வீகத்தன்மை மற்றும் புனிதத்தை இம்மும்மூர்த்திகள் கெடுத்ததாக ஆகாதா? அதனால் இசையின் அடிப்படை கூறுகள் மாறாமல் ராகத்திற்குள் பொருந்தக்கூடியதாகப் போடப்படும் எல்லா சாஹித்யங்களும் சிறப்பானவையே என்பதுதான் உண்மை.

உன்னால் முடியும் தம்பியின் ஒரு காட்சியில் இளையராஜா இதனைக் கோடிட்டு காட்டியிருப்பார். கச்சேரிக்குப் போகும் வழியில் விபத்தில் மாட்டிய ஒருவருக்கு உதவ சென்றதால் கமல் தாமதமாக கச்சேரிக்கு வருவார். இதனால் கோபமுற்ற தன் தந்தையைப் பார்த்து வழக்கமான சங்கதிகளைத் தவிர்த்து கமல் பாடும் ‘மானிட சேவை துரோகமா” என்பது எந்த இடத்திலும் பிசிறு தட்டாத முயற்சி.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழிசையை முன்னெடுக்க என்றே அண்ணாமலை செட்டியார், கல்கி, இராஜாஜி போன்றோரைப் புரவலராகக் கொண்டு தமிழிசை சங்கம் துவங்கப்பட்டது. ஆனால் அவர்கள் காலத்திற்குப் பிறகு அம்மாதிரி முயற்சிகளில் தீவிரம் காட்டப்படவில்லை. சில வருடங்கள் முன்பு இராமதாஸ் பொங்குதமிழ் பண்ணிசை பெருமன்றம் என்று ஒன்றை முன்னிலைப்படுத்தி தமிழிசை கச்சேரிகள் நடத்தினார். அதன் இன்றைய நிலை என்னெவென்று தெரியவில்லை. தனியாக கேஸட்களில் தமிழிசைப் பாடி வெளியிடும் நம் புகழ்பெற்ற சங்கீத வித்வான்கள்கூட சபா கச்சேரி என்று வந்துவிட்டால் தமிழை தீண்ட தகாததாக பார்க்கும் நிலை இன்றுவரை மாறவில்லை. தமிழிசைக்கான புரவலர்கள் அதிகரித்து, அது தன்னை பக்திக்குள் சிறைப்படுத்திக் கொண்டிருப்பதிலிருந்து வெளிவரும் ஒரு நாளில் இது மாறலாம்.

0 comments:

Post a Comment